ANI
இந்தியா

தலிபான் அமைச்சரிடம் முதல்முறையாக பேச்சுவார்த்தை: நன்றி தெரிவித்த மத்திய அரசு!

இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையின்மையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆப்கானிஸ்தான் நிராகரித்ததை அவர் வரவேற்றார்.

ராம் அப்பண்ணசாமி

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் முதல் முறையாக உரையாடிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையின்மையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆப்கானிஸ்தான் நிராகரித்ததை அவர் வரவேற்றார்.

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நேற்று (மே 15) நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்புறவை ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், அவர்களின் வளர்ச்சிக்கான தேவைகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, முதல்முறையாக இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையாக இதை குறிப்பிடலாம். இது தொடர்பாக, தன் எக்ஸ் கணக்கில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

தாலிபான் அரசை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும், முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தாலிபான் அமைச்சர் முத்தாகியை துபாயில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரிவின் இயக்குநர் ஜெனரலான ஆனந்த் பிரகாஷ், காபூலுக்குச் சென்று அமைச்சர் முத்தகியைச் சந்தித்தார்.

இருதரப்பு அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய அளவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவை குறித்து இருவரும் அப்போது விவாதித்தனர்.