கோப்புப்படம் 
இந்தியா

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவோம்: அமித் ஷா

கிழக்கு நியூஸ்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தெலங்கானாவின் போங்கிர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக முடிவுக்குக் கொண்டு வரும் என்று அவர் வாக்குறுதியளித்தார்.

"காங்கிரஸ் பொய் பேசி தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தி வருகிறார். அவர் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

ஆனால், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்த காங்கிரஸ், அதில் 4 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்குகிறது.

2019-ல் தெலங்கானாவில் நாங்கள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறை தெலங்கானாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவார்.

பாஜகவை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறச் செய்யுங்கள். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம்" என்றார் அமித் ஷா.

தெலங்கானாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 9 தொகுதிகளையும், பாஜக 4 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்தையும் வென்றன.