படம்: https://www.kbip.org/
இந்தியா

ஹிந்துக்கள் வாட்ஸ் ஆப் குழு: கேரள ஐஏஎஸ் அதிகாரி இடைநீக்கம்

"காவல் துறை விசாரணையின் முடிவில் ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறியதைப்போல அவருடைய ஃபோன் ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை."

கிழக்கு நியூஸ்

வாட்ஸ் ஆப் செயலியில் கேரள ஐஏஎஸ் அதிகாரிகளிடையே 'மல்லு ஹிந்து அதிகாரிகள்' என்ற பெயரில் குழு ஆரம்பித்த ஐஏஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவர் கேரள தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநராக உள்ளார். இவர் கடந்த அக்டோபர் 30 அன்று வாட்ஸ் ஆப் செயலியில் 'மல்லு ஹிந்து அதிகாரிகள்' என்ற பெயரில் குழு ஒன்றை ஆரம்பித்து, அதில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரிதளவில் பேசப்பட்டது. நிறைய அதிகாரிகள் இந்தப் பெயரில் குழு உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க, சில மணி நேரங்களில் இந்தக் குழு நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தனது ஃபோன் ஹேக் செய்யப்பட்டதாகவும் ஹேக் செய்யப்பட்ட பிறகே வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் காவல் துறையிடம் புகாரளித்தார்.

இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலர் சாரதா முரளீதரன் முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிக்கையின் அடிப்படையில், ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில், காவல் துறை விசாரணையின் முடிவில் ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறியதைப்போல அவருடைய ஃபோன் ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினை மற்றும் வகுப்புவாதம் மட்டுமே இந்தக் குழுவை உருவாக்குவதற்கான காரணம் என்று கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி ஜெயதிலக் எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளில் விமர்சனங்களை வைத்ததற்காக 2007-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி பிரஷாந்த் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் வேளாண் துறை சிறப்புச் செயலராக உள்ளார்.