ANI
இந்தியா

10 மொழிகளை ஊக்குவிப்பேன்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

"அறிவு என்பது வேறு, மொழி என்பது வேறு."

கிழக்கு நியூஸ்

ஆந்திரப் பிரதேசத்தில் 10 மொழிகளை ஊக்குவிப்பேன் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாட்டை ஆளும் திமுக மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கோட்டில் உள்ளன.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் 10 மொழிகளை ஊக்குவிப்பேன் என்று கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

"மொழி என்பது தொடர்புக்கான ஒரு கருவியே. தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உலகம் முழுக்க ஜொலிப்பதைப் பார்க்கிறீர்கள். அறிவு என்பது வேறு, மொழி என்பது வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உள்பட 10 மொழிகளை ஊக்குவிக்கப்போகிறேன்.

நாம் தெலுங்கு மொழியை ஊக்குவிக்க வேண்டும். ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதால், அதையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதாகப் பழகுவதற்கு நாம் ஹிந்தியைக் கற்றுக்கொள்வது நல்லது" என்றார் சந்திரபாபு நாயுடு.