கோப்புப்படம் ANI
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

இந்தப் புதிய அறிவிப்பின் கீழ் 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கூடுதலாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டைப் பெறலாம்

ராம் அப்பண்ணசாமி

கடந்த செப்.11-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, வருமான வரி வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்க ஒப்புதல் அளித்தது.

70 வயது பூர்த்தி ஆகியிருக்கும் மூத்த குடிமக்கள் ஏற்கனவே வேறு எந்த ஒரு மாநில அரசு/தனியார் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும் அவற்றிலிருந்து விலகி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஏற்கனவே மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும், இந்தப் புதிய அறிவிப்பின் கீழ் 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கூடுதலாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டைப் பெறலாம்.

இதில் எவ்வாறு பதிவு செய்வது?

https://abdm.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று, 70 வயதுக்கும் மேற்பட்ட ஒருவரின் ஆதார்/ரேஷன் அட்டைத் தகவல்களைப் பதிந்தால், அவருக்கென பிரத்யேகமான அடையாள எண் (unique ID) உருவாக்கப்படும். அதன்பிறகு அந்த அடையாள எண்ணை வைத்து மின் அட்டை (e-card) ஒன்று வழங்கப்படும். அந்த மின் அட்டையைக் காண்பித்து எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

டாப் அப் கவரேஜ்:

ஒரு வேளை மருத்துவச் சிகிச்சையில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் செலவு ஏற்பட்டால், அந்தக் கூடுதல் தொகையை குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஏற்கனவே பதிந்துள்ள ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டில் கழித்துக்கொள்ளலாம்.

இந்த வசதி 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.