உலக நாடுகள் வாரியாக உள்ள தங்க கையிருப்பு குறித்தும், இந்தியப் பெண்களிடம் உள்ள தங்கத்தின் அளவு குறித்தும், சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது உலக தங்க கவுன்சில்.
இந்த அறிக்கையின்படி, அமெரிக்கா (8,000 டன்), ஜெர்மனி (3,300 டன்), இத்தாலி (2,450 டன்), பிரான்ஸ் (2,400 டன்) மற்றும் ரஷ்யா (1,900 டன்) ஆகியவை உலகளவில் அதிக தங்க கையிருப்பை வைத்துள்ள முதல் ஐந்து நாடுகளாகும்.
இந்நிலையில், இந்தியப் பெண்களிடம் மட்டும் சுமார் 24,000 டன் தங்கம் உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த தங்கத்தில் 11 சதவீதமாகும். மற்ற எந்த நாட்டைவிடவும் இது அதிகமான அளவாகும். 2020-2021 காலகட்டத்தில், இந்தியப் பெண்களிடம் சுமார் 21,000 முதல் 23,000 தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.
மேலும், இந்தியப் பெண்களிடம் இருக்கும் மொத்த தங்கத்தில், சுமார் 40 சதவீதம் தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 28 சதவீத (6,270 டன்) தங்கம் உள்ளது.
இந்திய வருமான வரி சட்டத்தின்படி, மணமான பெண்கள் 500 கிராம் வரையிலும், மணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலும், ஆண்கள் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்திருக்க அனுமதி உள்ளது.
இந்தியாவில் சேமிப்புப் பொருளாகவும், சொத்தாகவும் மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் பொருளாகவும் தங்கம் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தங்கம் மீது இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தையும், விருப்பத்தையும் உலக தங்க கவுன்சிலின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.