வரும் 2025-2026 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என 2024-2025 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளுக்கு முந்தைய தினம், அந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் மத்திய நிதியமைச்சர். 2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று காலை பங்கேற்று உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இதனைத் தொடர்ந்து நடப்பு 2024-2025 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் 2025-2026 நிதியாண்டிற்கான வளர்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
`பலமான வர்த்தகம், அளவீடு செய்யப்பட்ட நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான தனியார் நுகர்வு என உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, வரும் 2026 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்.
உலகளாவிய தேவை மந்தமடைந்தாலும், உள்நாட்டில் நிலவிய மாறுபாடான சூழல்கள் காரணமாகவும் நாட்டின் தொழில்துறை அழுத்தங்களை எதிர்கொண்டது. உள்நாட்டுத் தேவையை பிரதிபலிக்கும் வகையில் தனியார் நுகர்வு நிலையாக இருந்தது’.