இந்தியா

வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினின் தங்கும் அனுமதி நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம்

வங்கதேசத்தில் நிலவிய வகுப்புவாதம் மற்றும் பாலின சமத்துவமின்மையை கடுமையாக விமர்சித்து தன் சுயசரிதையில் எழுதியிருந்தார் தஸ்லீமா.

ராம் அப்பண்ணசாமி

வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு இந்தியாவில் தங்குவதற்கு ஏதுவாக வழங்கப்பட்ட அனுமதியை, நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

வங்கதேசத்தில் நிலவிய மத தீவிரவாதத்தை எதிர்த்தும், வங்கதேச பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின். இவரது எழுத்துகளை தீவிரமாக எதிர்த்த அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விடுத்த மிரட்டல்களின் விளைவாக கடந்த 1994-ல் வங்கதேசத்திலிருந்து வெளியேறினார் தஸ்லீமா.

இதை அடுத்து ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 10 வருட காலம் தங்கியிருந்தார் தஸ்லீமா. 2004-ல் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்து அவர் கொல்கத்தாவில் குடியேறினார். கொல்கத்தாவில் அவர் மீது கொலை முயற்சி நடைபெற்றதை அடுத்து, 2007-ல் தில்லியில் குடியேறினார். அதன்பிறகு சில மாத காலம் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

கடந்த 20 வருட காலமாக உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற்று இந்தியாவில் தங்கியுள்ளார் தஸ்லீமா. அதிலும் தஸ்லீமாவுக்கான தங்கும் அனுமதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் நீட்டித்து வழங்கி வந்தது உள்துறை அமைச்சகம்.

இந்நிலையில், தனக்கான தங்கும் அனுமதி ஜூலை 22-ல் நிறைவுபெற்றதாகவும், அதை நீட்டித்துத் தருமாறு வழங்கிய மனுவை பரிசீலிக்கக்கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்டு கடந்த அக்.21-ல் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டார் தஸ்லீமா.

இதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கான தங்கும் அனுமதியை நீட்டித்தது. அதற்காக இன்று (அக்.22) உள்துறை அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தஸ்லீமா.

தஸ்லீமா நஸ்ரின் எழுத்துகளில் லஜ்ஜா (1993) நாவலும், அவரது சுயசரிதையான அமர் மேயேபெலாவும் புகழ்பெற்றவை. வங்கதேசத்தில் நிலவிய வகுப்புவாதம் மற்றும் பாலின சமத்துவமின்மையை கடுமையாக விமர்சித்து தன் சுயசரிதையில் எழுதியிருந்தார் தஸ்லீமா. இந்த இரு புத்தகங்களும் வங்கதேச அரசால் தடைசெய்யப்பட்டுள்ளன.