கோப்புப்படம் 
இந்தியா

மஹாராஷ்டிரத்தில் மீண்டும் ஹிந்தி சர்ச்சை: மார்பில் குத்தினாரா ஃபட்னவீஸ்?

"வேறு மொழியைப் படிக்க வேண்டுமானால், அதற்கு குறைந்தபட்சம 20 மாணவர்கள் தேவை..."

கிழக்கு நியூஸ்

மஹாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழிப் பாடமாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது அங்கு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

மஹாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கிலவழி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக ஹிந்தியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முன்பு தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக ஹிந்தி கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இம்முடிவு கைவிடப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி கட்டாயமாக்கப்படாது என மஹாராஷ்டிர பள்ளிக் கல்வி அமைச்சர் கடந்த ஏப்ரலில் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால், மே மாதம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், 3-ம் வகுப்பிலிருந்து ஹிந்தியை மொழிப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என பெற்றோர்கள் பலர் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். இறுதி முடிவு எடுக்கும் முன் இவற்றைக் கருத்தில் கொள்வோம் என்று அவர் பேசினார்.

இந்நிலையில், மஹாராஷ்டிர அரசின் மாற்றியமைக்கப்பட்ட அரசுத் தீர்மானத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை. ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 குழந்தைகள் மூன்றாவது மொழியாக ஹிந்திக்கு பதில் மாற்று இந்திய மொழியைத் தேர்வு செய்ய விரும்பினால், அதற்கு பள்ளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அரசின் இந்த உத்தரவில் வழிவகுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் இதுதொடர்பாக காட்டமாக விமர்சித்துள்ளார்.

"மஹாராஷ்டிரம் மற்றும் மராத்தி மக்களின் மார்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் ஒரு முறை குத்தியுள்ளார். மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்ற முறை கைவிடப்பட்டதாக பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். புதிய உத்தரவு என்ன சொல்கிறது?

  • மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயமாகும்.

  • வேறு மொழியைப் படிக்க வேண்டுமானால், அதற்கு குறைந்தபட்சம 20 மாணவர்கள் தேவை.

  • மாற்று மொழி என்பதைக் காட்டி, ஹிந்தியைத் திணிக்கும் திட்டமிடப்பட்ட சதி.

இது மராத்தி மொழி, அடையாளம் மற்றும் மக்களை நீக்கும் பாஜகவின் மஹாராஷ்டிர விரோத சதித் திட்டம். தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் விஸ்வாசம் தில்லி மக்களுக்கு தான் இருக்கிறது. மஹாராஷ்டிரம் அல்லது மராத்தி மக்கள் மீது அவர்களுக்கு விஸ்வாசம் கிடையாது" என்று ஹர்ஷ்வர்தன் சப்கால் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.