ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ANI
இந்தியா

ஹிமாச்சல் உள்ளாட்சி அமைப்புகளில் 2 வருடங்களுக்குத் தேர்தல் ஒத்திவைப்பு: | Himachal Pradesh

18 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரான செயல்.

ராம் அப்பண்ணசாமி

புதிதாக நிறுவப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை இரண்டு ஆண்டுகள் வரை ஒத்திவைக்க மாநில அரசுக்கு அனுமதி அளிக்கும் இரண்டு மசோதாக்கள் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

18 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிராக இந்த திருத்தங்கள் உள்ளதாக எதிர்க்கட்சி பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் ஹிமாச்சலப் பிரதேச மாநகராட்சி (திருத்த) மசோதா, 2025 மற்றும் ஹிமாச்சலப் பிரதேச நகராட்சி (திருத்த) மசோதா, 2025 ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மசோதாக்கள் அவையில் முன்மொழியப்பட்டபோது நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் சட்டப்பேரவையில் இல்லாததால், கிராமப்புற மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் அனிருத் சிங், மசோதாக்கள் மீதான விவாதத்தை மேற்கொண்டார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 22 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மூன்று மாநகராட்சிகள் (ஹமீர்பூர், உனா மற்றும் பட்டி), இரண்டு நகராட்சிகள் (நைடூன் மற்றும் குனிஹார்) மற்றும் 17 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும், உள்ளூர்வாசிகளுடன் கலந்தாலோசிக்காமல் 26 கிராம ஊராட்சிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போதுமான பணியாளர்கள், அலுவலகங்களுக்கான இடம் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் இல்லாததால் உடனடியாக இவற்றுக்கான தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று மசோதாக்களின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.