இந்தியா

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மழை உயிரிழப்புகள் எண்ணிக்கை 404 ஆக உயர்வு! | Himachal Pradesh |

29 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர் நிலங்கள் நாசமாகியுள்ளன.

கிழக்கு நியூஸ்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 20 முதல் மழைப் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பொதுச்சொத்துக்கு மொத்தம் ரூ. 4,400 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களில் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது. மேக வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது. நிலச்சரிவு, வெள்ளம், வீடுகள் சேதமடைந்தது, சாலைகள் துண்டிக்கப்பட்டது என மோசமான பாதிப்புகளைச் சந்தித்தது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அம்மாநிலத்துக்கு ரூ. 1,500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநிலம் முழுக்க ஏற்பட்ட மழைப் பாதிப்புகளை கணக்கிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூன் 20 முதல் மொத்தம் 404 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மழையை ஒட்டிய காரணங்களால் 229 பேர் உயிரிழந்துள்ளார்கள். சாலை விபத்துகள் மூலம் 175 பேர் உயிரிழந்துள்ளார்கள். நிலச்சரிவு, வெள்ளம், மின்சாரம் பாய்தல், மின்னல் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தது உள்ளிட்டவை மழையை ஒட்டிய காரணங்களாக பேரிடர் மேலாண்மை ஆணையம் கருதியுள்ளது. மோசமான சூழல், துண்டிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், நிலையற்ற சாலை இறக்கங்கள் உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மழையின் தாக்கமே இச்சாலை விபத்துகளுக்கும் காரணம் என பேரிடர் மேலாண்மை ஆணையம் கருதியுள்ளது.

சாலைகள், குடிநீர் விநோயகம், மின் பகிர்ந்தளிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் ரூ. 4,489 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் துறையும் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வீடுகளைப் பொறுத்தவரை மொத்தம் 1,616 வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. 8,278 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 29 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான பயிர் நிலங்கள் நாசமாகியுள்ளன. சாலைகளைச் சீரமைப்பது, மின் விநியோகத்தை வழங்குவது, குடிநீர் விநியோகத்தை சீர் செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைச் சீர் செய்வதில் ஹிமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆய்வுக்குப் பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கென 7 மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Himachal Pradesh | Himachal Pradesh Flood | Himachal Pradesh Land Slide |