ANI
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 39 உறுப்பினர்கள் தேவை என்றபோது, 45 உறுப்பினர்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஜூன் 4-ல் ஜார்க்கண்ட் முதல்வராக மூன்றாக முறையாகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன். இந்நிலையில் ஹேமந்த் சோரன் அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 76. இதில் ஹேமந்த சோரனுக்கு ஆதரவாக அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். மேலும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே, அதைப் புறக்கணிப்பதாக அறிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க 39 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 45 உறுப்பினர்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, `2019-ல் இருந்து அரசியலமைப்பு நடைமுறைகள் அனைத்தையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஆளும் கட்சியின் பலத்தையும், சக்தியையும் நீங்கள் அனைவரும் இன்று பார்த்திருக்கிறீர்கள். சபாநாயகருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்தார் ஹேமந்த் சோரன்.

கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறையால் நில மோசடி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறையால் கைது செய்யப்படும் முன்பே முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். கடந்த ஜூன் 28-ல் ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதை அடுத்து ஜூன் 4-ல் ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.