இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28-ல் அவருக்கு ஜாமீன் வழங்கியது

ராம் அப்பண்ணசாமி

3-வது முறையாக ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன். ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றப் பேரவைக்கு கடந்த 2019-ல் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறையால் நில மோசடி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பிர்சா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். அதற்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்ற சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28-ல் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளிவந்த ஹேமந்த் சோரன் பாஜகவை கடுமையாக சாடினார். எப்போது பொதுத் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார் என்று பாஜகவுக்குச் சவால் விடுத்தார்.

நேற்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த சோரன். இதனை அடுத்து இன்று ஜார்க்கண்ட் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.