தில்லி கனமழை - கோப்புப்படம் ANI
இந்தியா

தில்லியில் விடிய விடிய கனமழை: 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிப்பு!

அதிகபட்சமாக சஃப்தர்ஜங் பகுதியில் அதிகாலை வரை 81 மி.மீ. கனமழை பெய்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

இன்று (மே 25) அதிகாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி ஸ்தம்பித்துள்ளது. இந்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு, சாலையில் மழை நீர் தேங்குதல் மற்றும் விமானப் போக்குவரத்து சேவையில் தாமதம் போன்றவை ஏற்பட்டன.

பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையும், புறப்பாடும் பாதிக்கப்பட்டன. நேற்று இரவு 11:30 மணி முதல் இன்று அதிகாலை 4:00 மணி வரை, சுமார் 49 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தில்லி விமான நிலையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், நேற்றிரவு ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக விமான நடவடிக்கைகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு நிலவரம் குறித்து தொடர்ந்து சரி பார்க்குமாறும், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் விமானநிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி, நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சஃப்தர்ஜங் விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது, அதைத் தொடர்ந்து பிரகதி மைதான் பகுதியில் மணிக்கு 76 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது பதிவாகியுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக சஃப்தர்ஜங் பகுதியில் அதிகாலை வரை 81 மி.மீ. கனமழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலம் பகுதியில் 68 மி.மீ. மழை பெய்துள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் மூழ்கி நிற்கும் காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.