கோப்புப்படம் 
இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்: சந்திரபாபு நாயுடு

கிழக்கு நியூஸ்

தில்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பங்கேற்கவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது தெலுங்கு தேசம். சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன சேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தமுள்ள 175 இடங்களில் 164 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் மட்டும் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் தெலுங்கு தேசம் மட்டும் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மெகா வெற்றியின் மூலம் ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார்.

மத்தியில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காதபோதிலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏறத்தாழ 290-க்கும் மேறப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி 230-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ள 12 இடங்கள் மற்றும் ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு வென்றுள்ள 16 இடங்கள் பாஜகவுக்கு மிகமிக முக்கியமானதாக மாறியுள்ளது.

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இண்டியா கூட்டணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இன்று மாலை நடைபெறும் இண்டியா தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதனிடையே, நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவிடம் நிபந்தனைகள் விதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சந்திரபாபு நாயுடு தில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேசமயம், மாலை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தில்லி புறப்படுவதற்கு முன்பு விஜயவாடாவில் காலை 10.40 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது, தெலுங்கு தேசம் கட்சியை மாபெரும் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளதாகவும், தன் வாழ்நாளில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இன்று நான் தில்லி செல்கிறேன். தேர்தல் முடிந்தபிறகு தில்லி செல்வதற்கு முன்பு இதுதான் என்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பு. வாக்காளர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அரசியலில் வெற்றியும், தோல்வியும் சாதாரணம்தான். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். வெளிநாடுகளிலிருந்த வாக்காளர்கள்கூட நாடு திரும்பி வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காகக் கூட்டணி அமைக்கப்பட்டது. 55.38 சதவீத வாக்குகள் பதிவாகின. தெலுங்கு தேசம் மட்டும் 45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்து நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்ததுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். தில்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்கிறேன்." என்றார் சந்திரபாபு நாயுடு.