இந்தியா

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்!

மூன்று முறை ஹரியாணா எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

நான்கு முறை ஹரியாணா முதல்வராகப் பணியாற்றியவரும், முன்னாள் துணை பிரதமர் சௌதரி தேவி லாலின் மகனுமான ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று (டிச.20) காலமானார்.

1 ஜனவரி 1935-ல் தேவி லாலுக்கு மகனாகப் பிறந்தார் ஓம் பிரகாஷ் சௌதாலா. அடுத்தடுத்து பதவி இருந்த பிரதமர்கள் வி.பி. சிங், சந்திரசேகர் ஆகியோரின் அரசில் துணை பிரதமராகப் பணியாற்றினார் சௌதரி தேவி லால். முதலில் ஜனதா தளம் கட்சியில் இருந்த தேவி லால், பிறகு 1996-ல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியை தொடங்கினார்.

தந்தையின் வழியைப் பின்பற்றி அரசியலுக்குள் நுழைந்த ஓம் பிரகாஷ் சௌதாலா 1989-ல் ஹரியாணா முதல்வராகப் பொறுப்பேற்று 6 மாதங்கள் வரை அப்பதவியில் இருந்தார். பிறகு 2 மாதங்கள் கழித்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாலும், 5 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவானது.

1991-ல் மூன்றாவது முறையாக 15 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தார் ஓம் பிரகாஷ் சௌதாலா. அதன்பிறகு ஹரியாணாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இதனை அடுத்து இந்திய தேசிய லோக் தளம் கட்சி சார்பில் 1999 முதல் 2005 வரை முதல்வராக இருந்தார். மேலும் அவர் மூன்று முறை ஹரியாணா எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவராக உள்ள 89 வயதான ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று காலை அவரது குருகிராம் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.