இந்தியா

ஹரியானா பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தேதியை மாற்ற தேர்தல் ஆணையத்துக்குப் பாஜக கடிதம்

ராம் அப்பண்ணசாமி

வரும் அக்டோபர் 1-ல் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஹரியானா பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், `தேர்தல் நடைபெறவுள்ள தேதியான அக்டோபர் 1-க்கு முன்பும், பின்பும் வரும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு மக்கள் விடுமுறைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வாக்குப்பதிவு சதவீதத்தில் பாதிப்பு ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஹரியானா மாநில பாஜக தலைவர் மோஹன் லால் பதௌளி.

`செப்டம்பர் 28 சனிக்கிழமை பலருக்கு விடுமுறை தினமாகும். செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2-ல் காந்தி ஜெயந்தியும், அக்டோபர் 3-ல் மஹாராஜா அக்ராசென் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே அக்டோபர் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்குபதிவு சதவீதம் சரியும் வாய்ப்பு உள்ளது’ என்று ஹரியானா மாநில பாஜக தேர்தல் குழு உறுப்பினர் வரீந்தர் கர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு பாஜக எழுதியுள்ள கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரியானா மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான பூபீந்தர் சிங் ஹூடா, `பாஜக தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது’ என்றார்.

அக்டோபர் 1-ல் ஒரே கட்டமாக ஹரியானா மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 16-ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.