ANI
இந்தியா

நாடு கடத்தும்போது கை விலங்கிடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது: வெளியுறவு அமைச்சர்

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குடிமக்களை திருப்பி அழைத்துக்கொள்வது அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் தலையாய கடமை.

ராம் அப்பண்ணசாமி

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல எனவும், நாடு கடத்தும்போது கை விலங்கிடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது எனவும், அமெரிக்காவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் நேற்று (பிப்.6) இந்தியா அழைத்து வரப்பட்டார்கள். அவர்களின் கைகள் மற்றும் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில், அழைத்து வரப்பட்ட காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பாக விவாதிக்கக்கோரி இன்று (பிப்.6) மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் கூறியதாவது,

`அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து இந்த அவைக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். பொதுமக்கள் பரிமாற்றம் அமெரிக்காவுடனான நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்பதை உறுப்பினர்கள் அறிவார்கள். சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பதும், சட்டப்பூர்வமற்ற குடியேற்றத்தை நிராகரிப்பதும் நமக்கு இருக்கும் கடமையாகும்.

சட்டப்பூர்வமற்ற குடியேற்றம் பல்வேறு விதமான சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறும் இந்தியர்கள் அவர்களாகவே பிற குற்றங்களுக்கு பலியாடுகளாகிறார்கள். மனிதாபிமானமற்ற முறையில் பணி மேற்கொள்ளும் சூழலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்.

சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேற முயற்சி செய்யும்போது துரதிஷ்டவசமாக மரணங்களும் நிகழ்கின்றன. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குடிமக்களை திரும்பி அழைத்துக்கொள்வது அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் தலையாய கடமையாகும். அலையக உறவுகளில் இது பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும்.

இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தும் நிகழ்வு இது முதல்முறை அல்ல என்பதை உறுப்பினர்கள் அறிவார்கள். 2009-ல் தொடங்கி 2025 வரை முறையே 734, 799, 597, 530, 515, 591, 708, 1303, 1024, 1118, 2042, 1889, 805, 862, 617, 1368, 104 ஆகிய எண்ணிக்கையில் இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்களுக்கு கை விலங்கிடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கைவிலங்கிடும் நடைமுறை கிடையாது. நாடுகடத்தப்படும்போது உணவு, மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

கழிவறையை உபயோகப்படுத்தும்போது கைவிலங்குகள் அகற்றப்படும். பயணியர்கள் மற்றும் ராணுவ விமானங்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியா அழைத்துவரப்படும் மக்கள் எந்தவித இன்னல்களுக்கும் ஆளாகக்கூடாது என்று அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதேநேரம் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு உதவி செய்யும் வகையில் செயல்படும் தொழிலை ஒடுக்குவதில் நம் கவனம் இருக்கவேண்டும்.’ என்றார்.