இந்தியா

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் பிரபலம்: பரிகார பூஜைக்கு முடிவு! | Guruvayur Temple

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

குருவாயூர் கோயில் குளத்தில் ஹிந்து அல்லாத பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்ததைத் தொடர்ந்து, பரிகார பூஜைகளைச் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில். இந்தக் கோயில் குளத்தில் இருந்தபடி, ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

ஜாஸ்மின் ஜாஃபர் என்பவர் பிக்பாஸ் போட்டியில் முன்பு பங்கேற்றவர். சமூக ஊடகங்களில் இன்ஃப்ளூயன்சராக இருக்கிறார். இவர் கோயில் குளத்தில் இருந்தபடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். கால்களை தண்ணீரில் நனைப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த ரீல்ஸ் வீடியோ 6 நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, பெரும் சர்ச்சையாக வெடித்தது. கோயிலில் இது தடை செய்யப்பட்ட பகுதி. இதைத் தொடர்ந்து, வீடியோவை நீக்கிய ஜாஸ்மின் ஜாஃபர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், ஹிந்து அல்லாத பெண் ஒருவர் கோயில் குளத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்துவிட்டதாகக் கூறி பரிகாரப் பூஜைகளைச் செய்ய குருவாயூர் கோயில் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன் பகுதியாக அதிகாலை 5 மணி முதல் நண்பகல் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் புன்னியகர்மா நிறைவடைந்தபிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 நாள்களுக்கு பூஜை செய்வதும் சடங்கின் ஒரு பகுதி என்று கோயில் நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக தேவஸ்வம் நிர்வாகி ஓபி அருண் குமார் சார்பில் கோயில் காவல் நிலையத்தில், கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் புனிதத் தன்மையைக் கெடுத்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guruvayur Temple | Jasmin Jaffer | Reels Video | Guruvayur Temple Pond | Purification Rituals