குர்மீத் ராம் ரஹீம் ANI
இந்தியா

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல்

கடந்த இரு ஆண்டுகளில் ராம் ரஹீமுக்கு மட்டும் ஏழு முறை பரோல் வழங்கப்பட்டது.

கிழக்கு நியூஸ்

பாலியல் வன்கொடுமை, கொலைக்குற்றத்துக்காகக் கைதான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 50 நாள்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் 21 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது விமர்சனங்களை வரவழைத்துள்ளது.

ஹரியானாவின் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் 56 வயது குர்மீத் ராம் ரஹீம். ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு. அவருடைய ஆசிரமத்தில் இரு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காகச் 20 வருடச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டார்கள். தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங்கைக் கொலை செய்த குற்றத்துக்காக ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் நால்வருக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து ரோஹ்டக் சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு முதல் பலமுறை பரோல் பெற்றுள்ளார் ராம் ரஹீம். பாஜக ஆளும் ஹரியாணா மாநிலச் சிறை நன்னடத்தை விதிகளின்படி கொலைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கைதாகும் குற்றவாளிகளுக்கு பரோலில் விட அனுமதி கிடையாது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் ராம் ரஹீமுக்கு மட்டும் ஏழு முறை பரோல் வழங்கப்பட்டது. தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ள ராம் ரஹீம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.