குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்துள்ள கம்பீரா பாலம் நேற்று (ஜூலை 9) காலை இடிந்து விழுந்ததில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளை இணைக்கும் காம்பிரா பாலம் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்துள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதி எதிர்பாராவிதமாக திடீரென நேற்று காலை இடிந்து விழுந்ததில், அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த ஐந்து வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன.
இதைத் தொடர்ந்து ஆற்றில் விழுந்து காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே ஆற்றில் விழுந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் பணியினரும், மாநில காவல்துறையினரும் நேற்று முதல் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
`மூன்று உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உள்ளது. 4 பேரை காணவில்லை. ஆற்றில் 4 கி.மீ. வரையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் இரு வாகனங்கள் சேற்றில் சிக்கியுள்ளன. மழை பெய்து வருவதால் ஆற்றில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது’ என்றார்.
எதிர்பாராவிதமாக ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில், இரு லாரிகள், இரு பிக் அப் வேன்கள், ஒரு ரிக்ஷா ஆகியவை ஆற்றுக்குள் விழுந்ததாகவும், இரு வாகனங்கள் பாலத்தின் மீது இருப்பதாகவும் வதோதரா காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.