நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி மறுசீரமைப்புக்கு மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது அமலில் இருக்கும் நான்கு வரி விகிதங்கள், இரண்டு வரி விகிதங்களாக குறைக்கப்படவுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி மறுசீரமைப்புக்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலால் நியமிக்கப்பட்ட மாநில அமைச்சர்கள் குழுவின் (GoM) கூட்டம் இன்று (ஆக. 21) நடைபெற்றது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு வரி விகிதங்களை, 5% மற்றும் 18% என இரண்டு வரி விதிகங்களாக குறைக்கும் முடிவுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வரி முறையை எளிமையாக்கவும், வரி விதிப்பை பின்பற்ற சுலபமானதாக மாற்றவும், குடிமக்கள் மற்றும் வணிகங்கள் மீதான வரி விதிப்பு சுமையைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி 2.0-ன் தொடக்கத்தை இந்த நடவடிக்கை குறிப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜி.எஸ்.டி. வரி கட்டமைப்பின் கீழ், 12% மற்றும் 28% விகிதங்கள் ரத்து செய்யப்படுவதால், இதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் 5% அல்லது 18% விகிதங்களுக்குக் கீழ் பட்டியலிடப்படுகின்றன.
குறிப்பாக, 12% வரி விதிக்கப்பட்டு வரும் 99% பொருட்கள் 5% வரி விகிதத்திற்குக் கீழ் பட்டியலிடப்படும். இதேபோல், 28% வரி விதிக்கப்பட்டு வரும் 99% பொருட்கள் 18% வரி விகிதத்திற்குக் கீழ் பட்டியலிடப்படவுள்ளன.
ஆடம்பர மற்றும் புகையிலை, சிகரெட் போன்ற தீங்கிழைக்கும் பொருள்களுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஆடம்பர கார்களை 40% வரி வரம்பின் கீழ் கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்கும் பட்சத்தில் அவை நடைமுறைக்கு வரும்.
மேலும், தற்போது அமலில் இருக்கும் நடைமுறையைப் பின்பற்றி பெட்ரோல், டீசல் போன்ற பொருள்கள் வழக்கம்போல ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு வெளியே இருக்கும்.
இந்த அமைச்சர்கள் குழுவிற்கு பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமை தாங்கினார். உத்தர பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங், மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய் அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா, கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.