சஞ்சார் சாத்தி செயலி: மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு  
இந்தியா

சஞ்சார் சாத்தி செயலி: மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு | Sanchar Saathi |

குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் செயலியைப் பயனர்கள் அதிகம் தரவிறக்கி வருவதால்.....

கிழக்கு நியூஸ்

ஸ்மார்ட் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை இயல்பு நிலையில் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் போன்களில் மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ செயலியை இயல்பு நிலையில் நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற சந்தேகங்கள் எழுந்தன. இது சர்ச்சையான நிலையில், நேற்று (டிச. 2) நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, செயலியை ஸ்மார்ட் போனில் வைத்திருக்க வேண்டியது கட்டாயமல்ல என்றும், அதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம் என்றும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், செயலியை இயல்பு நிலையில் நிறுவ வேண்டும் என்று மொபைல் நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அனைத்து குடிமக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை இயல்பு நிலைச் செயலியாக நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது சைபர் உலகில் உள்ள மோசடிக்காரர்களிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

பயனர்களைப் பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற மோசடிக்காரர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் புகாரளிக்கும் ‘ஜன் பகீதாரி’ அமைப்புக்கு உதவுகிறது. பயன்படுதுபவர்களின் பாதுகாப்பைத் தவிர இந்தச் செயலி வேறு எந்தச் செயல்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படவில்லை. பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் செயலியை அகற்றிக் கொள்ளலாம் என்பது மத்திய அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். மேலும், ஒரு நாளைக்கு 2000 மோசடி சம்பவங்கள் குறித்த புகார் தகவல்களுக்கு உதவி வருகிறார்கள். இந்தச் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் செயலி குறித்து அறியாத குடிமக்களுக்கும் இதன் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்தான் ஸ்மார்ட் போன்களில் செயலியை இயல்பு நிலையில் நிறுவ, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது ஒரு நாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கியுள்ளார்கள். மக்கள் இதற்கு அளித்து வரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு மொபைல் போன்களில் சஞ்சார் சாத்தி செயலி இயல்பு நிலையில் நிறுவப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெறுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The Government with an intent to provide access to cyber security to all citizens had mandated pre-installation of Sanchar Saathi app on all smartphones. Given Sanchar Saathi’s increasing acceptance, Government has decided not to make the pre- installation mandatory for mobile manufacturers.