நாளை (ஜூலை 21) தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஜூலை 20) கூறியுள்ளார்.
எந்தவொரு தலைப்பின் மீதான விவாதத்தில் இருந்தும் மத்திய அரசு பின்வாங்காது என்றும், அவையை சுமுகமாக நடத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளதை அடுத்து, தலைநகர் தில்லியில் இன்று (ஜூலை 20) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 51 அரசியல் கட்சிகளை சேர்ந்த 54 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவுபெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரிஜிஜு, `ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்’ என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் (இந்தியா - பாகிஸ்தான்) தாக்குதல் நிறுத்தக் கூற்றுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது தொடர்பாக ரிஜிஜுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, `நாடாளுமன்றக் கூட்டத்தின்போது நாங்கள் தகுந்த முறையில் பதிலளிப்போம்’ என்றார்.
ஆக்கபூர்வமான விவாதத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய ரிஜிஜு, முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இருப்பார் என்று கூறினார்.
மேலும், மழைக்கால கூட்டத்தொடரின்போது 17 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், விவாதங்களின்போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் கூறினார்.