ANI
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல் | Dearness Allowance |

பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவிலைப்படியை 58% ஆக உயர்த்த ஒப்புதல்...

கிழக்கு நியூஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில், விலைவாசி உயர்வைக் கையாளும் விதமாக ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை என இருமுறை அகவிலைப்படி திருத்தத்தைச் செய்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி திருத்தம் கடந்த மார்ச்சில் நடைபெற்றது. அப்போது, 53% ஆக இருந்த அகவிலைப்படி, 2% உயர்த்தப்பட்டு 55% ஆக்கப்பட்டது. அதனை அரசு ஊழியர்கள் ஜனவரி முதல் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 2-வது அகவிலைப்படி திருத்தம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நமது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஜூலை 1, 2025 முதல், அகவிலைப்படி 58% ஆக உயர்கிறது. அதாவது 3% அதிகரிக்கிறது. இதனால் ஏறத்தாழ 49 லட்சம் ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடிப் பலனைப் பெறுவார்கள். இது நாடு முழுவதும் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், மத்திய அரசின் அதிகரிப்பிற்குப் பிறகு, மாநில அரசு ஊழியர்களும் இதன் நேரடிப் பலனைப் பெறுகிறார்கள். நமது அனைத்து மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு மொத்தம் ரூ. 10,084 கோடி கூடுதலாகப் பெறுவார்கள்.”

என்று கூறினார்.

தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.