ஈ20 பெட்ரோலால் எவ்வளவு மைலேஜ் குறையும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் 
இந்தியா

ஈ20 பெட்ரோலால் எவ்வளவு மைலேஜ் குறையும்?: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் | E20 Petrol |

எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு நல்லதா? சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கிறதா? என்பதில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகின்றன.

கிழக்கு நியூஸ்

எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 5% வரை குறையும் என்றும், வாகனங்களின் உட்பாகங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகளின் மீதான ஈரானின் தாக்குதல், கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், இந்தியாவின் எத்தனால் கொள்கை போன்ற காரணங்களால், இன்று நாம் பெறும் பெட்ரோலில் 80% சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலும், 20% எத்தனாலும் கலந்து விநியோகிக்கப்படுகிறது. இது வாகனங்களுக்கு நல்லதா? சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கிறதா? எத்தனால் பெட்ரோல் தேவையா என்பதில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகின்றன.

ஈ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு

அண்மையில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பாணியில், ஈ20 ஜனதா கட்சி என்று புதிய கட்சி உருவாகி, எத்தனால் கலப்பில்லாத பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. மறுபுறம் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஈ20 பெட்ரோலுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இந்த வேளையில், ஈ20 பெட்ரோல் குறித்து மத்திய அரசிடமிருந்து முக்கியமான பதில்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் எத்தனால் கொள்கை

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் பதிலைப் பார்க்கும் முன், இந்தியாவின் எத்தனால் கொள்கையைப் பற்றி அறிவோம்.

இந்தியாவின் எத்தனால் கலவை பெட்ரோல் (Ethanol Blended Petrol - EBP) கொள்கை என்பது, வெறும் எரிபொருள் மாற்றுத் திட்டம் மட்டுமல்ல. இது எரிசக்தி பாதுகாப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு, விவசாயிகளின் வருமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய நான்கு நோக்கங்களைக் கொண்டது. இதன் முக்கிய அம்சங்கள்,

1. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது.

இந்தியா தனது பெட்ரோலிய தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எத்தனால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

2. விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்

கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் உபரி உற்பத்தி ஏற்படும். அந்த உபரி கரும்புச் சாறு, மொலாசஸ் மற்றும் சில உணவுத் தானியங்களை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் புதிய சந்தை உருவாக்கப்பட்டது.

3. மாசுபாட்டைக் குறைப்பது

எத்தனால் கலந்த பெட்ரோல் எரியும்போது கார்பன் மோனாக்சைடு மற்றும் சில ஹைட்ரோகார்பன் வெளியேற்றம் குறையும் என அரசு கூறுகிறது. இதன் மூலம் வாகன மாசுபாட்டைக் குறைப்பதே நோக்கம்.

4. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல்

பெட்ரோல் ஒரு புதையுண்ட எரிபொருள் (Fossil Fuel). எத்தனால் புதுப்பிக்கத்தக்க இயற்கை எரிபொருள். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரிப்பதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

ஆகியவையே என்று 2018-ல் வெளியான இயற்கை எரிசக்திக்கான தேசிய கொள்கை ஆவணம் விவரிக்கிறது. இதன் அடிப்படையிலேயே தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விநியோகிக்கப்படுகிறது.

மத்திய அரசின் விளக்கம்

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகனங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் இணை அமைச்சர் சுரேஷ் கோபி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

மைலேஜ் குறையும் அளவு

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“எரிபொருள் சிக்கனம் என்பது ஓட்டுநர் இயக்கும் சூழல், ஓட்டும் பழக்கம் மற்றும் வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட பல காரணிகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதைய சூழல் தொடர்பாக அரசின் முகமைகள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, E10-க்காக வடிவமைக்கப்பட்ட சில வாகனங்களில் பொதுவாக 3% முதல் 5% வரை மைலேஜ் குறைவது வரையறுக்கப்பட்டுள்ளது.

ஈ20 பெட்ரோலின் நன்மை

அதே நேரத்தில், E20 அதிக ஆக்டேன் மதிப்பு, சிறந்த ஆன்டி-நாக் (Anti-knock) பண்புகள், மாசு குறைவான பயன்பாட்டையும், மென்மையான இயந்திர செயல்திறனையும் வழங்குகிறது. E20 எரிபொருள் மூலம் மேம்பட்ட பயணத் தரம் கிடைக்கிறது. மேலும், E10 எரிபொருளுடன் ஒப்பிடும்போது சுமார் 30% குறைவான கார்பன் உமிழ்வை வழங்குகிறது.

எத்தனால் என்பது புதிய எரிபொருள் அல்ல. உலகளவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரேசில் போன்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக எத்தனால் கலவை கொண்ட எரிபொருள்களை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில், எத்தனால் கலவை பெட்ரோல் திட்டம் 2001-ல் முன்னோட்டத் திட்டமாக தொடங்கப்பட்டது. 2006-ல் E5 அறிமுகப்படுத்தப்பட்டது. 2013–14-ல் எத்தனால் கலவை சுமார் 1.53% ஆகவே இருந்தபோதிலும், தேவையான உற்பத்தித் திறன், உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு, அது திட்டமிட்ட முறையில் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகன பாகங்களுக்குப் பாதிப்பில்லை

எரிபொருள் அமைப்புகள், இயந்திரத்தின் நீடித்த செயல்திறன், இயக்கத்தன்மை, மாசு உமிழ்வு ஆகியவை வெற்றிகரமாகச் சோதித்து உறுதிப்படுத்தப்பட்ட பிறகே E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுகள், பழைய வாகனங்களிலும் E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடோ அல்லது அசாதாரணமான தேய்மானமோ ஏற்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மையில் இதுகுறித்து தரவுகளைச் சமர்ப்பித்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று, 2025–26 நிதியாண்டில் 2.84 கோடி வாகனங்களுக்குப் பழுது பார்த்துள்ளதாகவும், அவற்றில் E20 பயன்பாட்டால் துருப்பிடித்தல், அசாதாரண தேய்மானம், உதிரிபாகங்களின் ஆயுட்காலம் குறைதல் போன்ற எந்தப் பிரச்னையும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் எத்தனால் காரணமாக வாகனத்தின் பாகங்கள் சேதமடைவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈ20-க்கு மாற்று திட்டம் இல்லை

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, தற்போது நாட்டில் இயங்கும் வாகனங்களில் எத்தனை வாகனங்கள் முழுமையாக E20-க்கு இணக்கமானவை என்பது குறித்து தனியாக எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், E20 பெட்ரோலுக்கு மாற்றாக தூய பெட்ரோல் (E0) அல்லது E10 பெட்ரோல் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்விக்கும், “தற்போதைக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை, E20 பெட்ரோலைக் கடந்து எத்தனால் கலவை சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்கால முடிவுகள் அனைத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படும்” என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Government admits E20 fuel may reduce mileage by 3–5% in older vehicles, but says studies show no engine damage or abnormal wear.