ANI
இந்தியா

28 தொகுதிகளில் 24-ல் வெற்றி பெறுவோம்: எடியூரப்பா

அமித் ஷா, நட்டா ஆகியோருடன் தேர்தல் பற்றி விவாதித்தோம்.

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

"நேற்று, அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் கர்நாடகாவின் மக்களவைத் தொகுதிகளைப் பற்றி விவாதித்தோம். அவர்கள் இதைப் பற்றி பிரதமருடன் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன், அதன் பிறகு அவர்கள் சில முடிவுகளுக்கு வருவார்கள், 2-3 நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும்... மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று 100 % நம்புகிறேன். நாங்கள் எங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்" என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில், 28 இடங்களில் 25 இடங்களை பாஜக வென்றது.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக பாஜகவின் மத்திய தேர்தல் குழு புதன்கிழமை கூடியது. 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை பாஜக மார்ச் 2 அன்று வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவும் இன்று தில்லியில் ஒரு கூட்டத்தை நடத்தி வருகிறது, அங்கு கர்நாடகத்தின் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை இறுதி செய்யும் என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 2023 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.