முதல்வருடன் கோவிந்த் கௌடே (வலது) - கோப்புப்படம் ANI
இந்தியா

முதல்வர் கட்டுப்பாட்டில் இருந்த துறை மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் பதவி நீக்கம்!

ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்ட பிறகே, கோப்புகளைச் சமர்ப்பிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ராம் அப்பண்ணசாமி

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கட்டுப்பாட்டில் இருந்த பழங்குடியினர் நலத்துறை மீது மூன்று வாரங்களுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அம்மாநில கலாச்சார, விளையாட்டு மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் கோவிந்த் கௌடே தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாநில பழங்குடியினர் நலத்துறையால் கடந்த மே 25-ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய கௌடே,

`வரி செலுத்துவோரின் பெரும் தொகை பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிகழ்வை திறமையாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றால், அது நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடற்ற தன்மையைக் காட்டுகிறது. என் கருத்துப்படி, நிர்வாகம் இன்று பலவீனமடைந்துள்ளது.

ஒப்பந்ததாரர்களின் கோப்புகள் ஷ்ரம் சக்தி பவன் (அரசு அலுவலகம்) கட்டடத்தில் தந்திரமாக கையாளப்படுகின்றன. அவர்களிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்ட பிறகே, கோப்புகளைச் சமர்ப்பிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்றார்.

அரசாங்கத்தின் மீது கௌடே முன்வைத்த குற்றாச்சாட்டு மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொறுப்பற்ற கருத்துகளுக்கு பொறுத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சாவந்த் எச்சரிக்கை விடுத்த பிறகு, தாம் பேசியவை ஊடகங்களில் திரித்து கூறப்பட்டதாக கௌடே விளக்கமளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரது பொறுப்பில் இருந்த துறைகளை தற்காலிகமாக முதல்வர் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த கோவா மாநில பாஜக தலைவர் தாமு நாயக், `ஒருமித்த வகையில் அரசாங்கம், கட்சி, கட்சியின் மத்திய தலைமை ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒழுக்கம் அவசியமானதாகும்’ என்றார்.