மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஒடிஷாவைச் சேர்ந்த மாணவி மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் கல்லூரியிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. கல்லூரி வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
மொபைல் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார். உடன் சென்ற ஆண் நண்பர் ஏன் தனது மகளைப் பாதுகாக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டை வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மூன்று வாரங்களுக்கு முன்பு ஒடிஷாவில் கடற்கரையில் மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். ஒடிஷா அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். இரவு 12.30 மணிக்கு எப்படி அவர் வெளியே வந்தார்? எனக்குத் தெரிந்தவரை வனப் பகுதியில் தான் சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது எனத் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தைப் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், தனியார் கல்லூரிகள் தங்களுடைய மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் கல்லூரிகளுக்கு வெளியே பெண்களை அனுமதிக்கக் கூடாது. பெண்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இது வனப் பகுதி. காவல் துறையினர் அனைவரையும் தேடி வருகிறார்கள். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். மற்ற மாநிலங்களில் நடந்தாலும் அவை கண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் இது நடந்துள்ளது. அந்த மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என நாங்களும் நினைக்கிறோம். எங்களுடைய மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். கீழமை நீதிமன்றம் குற்றவாளியைத் தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது" என்றார் மமதா பானர்ஜி.
Mamata Banerjee | West Bengal | MBBS Student Rape Case |