இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 674 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 891 ஆக அதிகரித்துள்ளது, நேற்று (ஆக. 10) வெளியிடப்பட்ட 16-வது சிங்கங்கள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி இது 32.2% அதிகரிப்பு ஆகும்.
இந்தியாவில், ஆசிய சிங்கங்கள் குஜராத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலும் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கிர் தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன.
அங்குள்ள பெரும்பாலான சிங்கங்கள் தற்போது மனித குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றன. இதனால் அவற்றின் இயற்கையான வேட்டை உள்ளுணர்வு மாற்றத்திற்கு உள்ளாகி, கால்நடைகள் அல்லது மனிதர்களால் வழங்கப்படும் உணவை அவை நம்பியிருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த காரணத்தால், சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இடையே கவலை அதிகரித்துள்ளது.
நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவின் 258 சதுர கி.மீ. மையப் பகுதியில் மொத்த 20% சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன, அங்கு அவற்றால் காட்டு விலங்குகளை வேட்டையாட முடியும். 1,400 சதுர கி.மீ. அளவிற்கு தேசிய பூங்கா பரவியுள்ளது.
மனிதர்களுக்கு அருகில் வாழும் மீதமுள்ள சிங்கங்கள், `பிரதானமாக கால்நடைகளை இரையாக உட்கொள்கின்றன அல்லது மனிதர்களால் அப்புறப்படுத்தப்படும் இறந்த கால்நடைகளை உண்கின்றன’ என்று குஜராத் வனத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 21 எண்ணிக்கையிலான மனித தாக்குதல் சம்பவங்கள், குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.
`சிங்கங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து உணவைப் பெற்று அவர்களுடன் இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன, அதேநேரம் சுற்றுலா மூலம் கிடைக்கும் மேம்பட்ட வாழ்வாதாரத்தால் உள்ளூர் சமூகங்கள் பயனடைகின்றன," என்று ஆய்வாளரும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான யத்வேந்திரதேவ் வி. ஜாலா கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப சிங்கங்களின் வாழ்விடத்தை 30,000 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தி, போர்பந்தரில் உள்ள பர்தாவை இரண்டாவது சரணாலயமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.