ANI
இந்தியா

ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் இரண்டாவது இந்தியப் புகலிடம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, கென்யா ஆகிய நாடுகளிடம் இருந்து சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசியப் பூங்கா, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் முதல் இந்தியப் புகலிடமாக உருவாகி 2.5 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள மற்றொரு வனவிலங்குப் பூங்கா சிவிங்கிப் புலிகள் புதிய புகலிடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரபாஸ், பவக் எனப் பெயரிடப்பட்டுள்ள இரு தென்னாப்பிரிக்க சிவிங்கிப் புலிகள், நாளை (ஏப்.20) மத்திய பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள காந்தி சாகர் வலவிலங்கு சரணாலயத்தில் இடமாற்றம் செய்யப்படவுள்ளன.

மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் சிவிங்கிப் புலி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைநகர் போபாலில் நேற்று (ஏப்.18) நடைபெற்றது. மத்திய சுற்றச்சூழல், வன அமைச்சர் பூபேந்தர் யாதவ், முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்ற இந்த கூட்டத்தில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவிங்கிப் புலிகளுக்கான உகந்த சூழலை உருவாக்க கடந்தாண்டு முதலே, காந்தி சாகர் வலவிலங்கு சரணாலயத்தில் பணிகள் நடைபெற்று வந்தன. சரணாலயத்தின் 64 சதுர கி.மீ. சுற்றளவுள்ள பகுதியில் அவற்றுக்கான பிரத்யேகமான வசிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2 சிவிங்கிப்புலிகள் இடமாற்றம் செய்யப்பட்டபிறகு, படிப்படியாக பிற சிவிங்கிப்புலிகள் அங்கே கொண்டுவரப்படும் என்று தகவலளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, கென்யா ஆகிய நாடுகளில் இருந்து சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.

காந்தி சாகர் வலவிலங்கு சரணாலயம் ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளதால், ஒருங்கிணைந்த சிவிங்கிப்புலி பாதுகாப்பு வளாகத்தை உருவாக்க இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சிவிங்கிப் புலி திட்டத்திற்காக இதுவரை ரூ. 112 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.