இந்தியா

ஓஆர்எஸ் விவகாரத்தில் நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்: பின்னணி என்ன? | ORS | WHO |

பானங்களில் ஓஆர்எஸ் பெயரை பயன்படுத்த தடை விதித்துஉணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு...

கிழக்கு நியூஸ்

சர்க்கரை கரைசலை ஓஆர்எஸ் என்று விற்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், 8 ஆண்டுகளாக இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்த பெண் மருத்துவர் நெகிழ்ச்சியுடன் காணொளி வெளியிட்டுள்ளார்.

மருத்துவத்துறையில் ஓஆர்எஸ் (Oral Rehydration Solutions) என்ற பானம், உடலில் சத்தின்றி பலவீனமாக உணரும் நோயாளிகளுக்கு உடனடி ஆற்றல் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய உப்புச் சத்துகள் நிறைந்த ஓஆர்எஸ், அருந்திய சில மணித்துளிகளில் பலவீனத்தைப் போக்கி உடனடி ஆற்றல் வழங்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவாகக் காணப்படும் சூழல்களில் ஓஆர்எஸ் பரிந்துரைக்கப்படும். ஆனால், சமீப காலங்களில் ஓஆர்எஸ் என்ற பெயரில் வெறும் சர்க்கரை கரைசல்கள் விற்கப்படுவதாக பல புகார்கள் எழுந்தன.

இதற்கிடையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் என்பவர் குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும் இந்த ஓஆர்எஸ் முறைகேடு குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். மேலும், இதுகுறித்து அவர் மத்திய அரசிடம் புகார்கள் அளித்ததாகவும் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு சான்றளித்த ஓஆர்எஸ் பானங்களை மட்டுமே அருந்த வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 15 அன்று இதுகுறித்த முக்கிய அறிவிப்பை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட ஓஆர்எஸ் மூலப்பொருள்கள் ஃபார்முலா அல்லாத பானங்களில் ஓஆர்எஸ் என்ற சொல்லைப் பயன்படுத்துவது விதி மீறலாகும். இது மக்களை ஏமாற்றி, தவறாக வழிநடத்தும் விதத்தில் உள்ளது. பழச்சாறுகள், சோடா பானங்கள் மற்றும் உடனடியாகப் பருகக் கூடிய எந்த பானங்களிலும் ஓஆர்எஸ் என்ற சொல் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ பயன்படுத்தக் கூடாது. அதன் அடிப்படையில் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும் தங்கள் உணவுப் பொருள்களிலிருந்து ஓஆர்எஸ் என்ற சொல்லை தனிப்பட்ட பெயராகவோ வர்த்தக முத்திரையின் ஒரு பகுதியாகவோ பயன்படுத்துவதை நிறுத்தி, உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ஓஆர்எஸ் தொடர்பாக உணவு நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள செய்தியால் உணர்ச்சி வசப்பட்ட பெண் மருத்துவர் சிவரஞ்சனி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் “எட்டு ஆண்டு போரை வென்றுவிட்டோம். இனி ஓஆர்எஸ் என்ற பெயரைப் பயன்படுத்த மட்டும் அல்ல, விற்பனை கூட செய்ய முடியாது. இது ஒட்டுமொத்த மக்களின் வெற்றி” என்று நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.