இந்தியா

பால் பொருட்களில் A1, A2 என்று விளம்பரப்படுத்துவதை நீக்க உத்தரவு

இந்த அமினோ அமிலங்களின் வேறுபாட்டுக்கு அதை உற்பத்தி செய்யும் மாடுகளின் மரபணுவில் உள்ள வேறுபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது

ராம் அப்பண்ணசாமி

பால் பொருட்களை A1, A2 என்று குறிப்பிட்டு விற்பனை மேற்கொள்வதை நீக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது FSSAI.

பாலில் உள்ள ஊட்டச்சத்துகளில் புரதச்சத்து மிகவும் முக்கியமானது. அதிலும் மாட்டுப் பாலில் பத்துக்கும் மேற்பட்ட கேசின் புரதங்கள் உள்ளன. இவற்றில் பீட்டா கேசின் என்ற புரதத்தின் இரு மாறுபட்ட வடிவங்கள் A1, A2 என்று அழைக்கப்படுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு அவற்றில் இருக்கும் அமினோ அமிலங்கள் காரணமாகும்.

இந்த அமினோ அமிலங்களின் வேறுபாட்டுக்கு அதை உற்பத்தி செய்யும் மாடுகளின் மரபணுவில் உள்ள வேறுபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய நாட்டுப் பசும் பாலில் A2 புரதமும், ஜெர்சி உள்ளிட்ட வெளிநாட்டுப் பசு ரகங்களின் பாலில் A1 புரதமும் உள்ளன. A1 புரதம் உள்ள பாலைவிட, A2 புரதம் உள்ள பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.

மேலும் இந்தப் புரதங்களின் செரிமானத்திலும் வேறுபாடுகள் உள்ளன. சில ஆய்வுகளில், A2 புரதம் உள்ள நாட்டு மாட்டுப் பால் உடலுக்கு நல்லது, அதை ஒப்பிடும்போது A1 புரதம் உள்ள பால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சில விற்பனை நிறுவனங்கள் தங்கள் பால், பால் சார்ந்த பொருட்களின் பாக்கெட்டுகளில் இதில் A2 புரதம் உள்ளது என்று குறிப்பிட ஆரம்பித்தன.

எனவே இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 22-ல் உத்தரவு பிறப்பித்துள்ள FSSAI, இவ்வாறு பாக்கெட்டுகளில் A1, A2 என்று குறிப்பிட்டு விற்பதற்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லை. எனவே 6 மாதத்துக்குள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள பாக்கெட்டுகளை உபயோகித்து முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு இப்படி வகைப்படுத்தி விற்க முடியாது என்று அறிவித்து உத்தரவித்துள்ளது.