உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், மஹாராஷ்டிரத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பள்ளியிலிருந்து தொடங்கி நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவியை அடைந்த தனது பயணத்தைப் பற்றிப் பேசினார்.
தன்னுடைய இத்தகைய பயணத்திற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முழுவதுமாக கடன்பட்டுள்ளதாக அந்த உரையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே 11-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். இதன் மூலம் முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரானார் கவாய். மேலும், பௌத்த மதத்தை பின்பற்றும் நாட்டின் முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார்.
`பிரதிநிதித்துவத்திலிருந்து உணருதல் வரை: அம்பேத்கரின் கனவை வாழ்வது’ என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு யூனியனில் தலைமை நீதிபதி கவாய் உரையாற்றினார்.
இந்தியாவின் கடந்த கால சாதிய முறையை நினைவுபடுத்தும் விதமாக தன் உரையை தொடங்கிய கவாய், `ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட என்னைப் போன்ற தூய்மையற்ற மக்கள், கனவு காணக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று உங்கள் முன்பு இந்தியாவின் தலைமை நீதிபதியாக நான் நிற்கிறேன். அதுதான் நமது அரசியலமைப்பின் சக்தி’ என்றார்.
மேலும், `இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதைத்தான் செய்தது. இந்திய மக்கள் தங்களுக்காகப் பேச முடியும் என்றும், சமூகம் மற்றும் அதிகாரத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர்களுக்கு சமமான இடம் உண்டு என்றும் அது கூறியது. சாதி, வறுமை, ஒதுக்குதல், அநீதி போன்றவற்றை உறுதியுடன் அது எதிர்கொள்ளத் துணிகிறது.
இந்தியாவின் மிகவும் பின்தங்கிய குடிமக்களுக்கு, அரசியலமைப்பு என்பது வெறும் சட்டப்பூர்வமான சாசனம் அல்ல. அது ஒரு உணர்வு, உயிர்நாடி, மையில் பதிந்த அமைதியான புரட்சி. ஒரு நகராட்சிப் பள்ளியிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகம் வரையிலான எனது சொந்தப் பயணத்தில், அது ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறது’ என்றார்.