தில்லியில் புத்தம் புதிய மஹிந்த்ரா தாரை எலுமிச்சை மீது ஏற்ற நினைத்து, ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் முதல் மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது.
கிழக்கு தில்லி நிர்மான் விஹாரில் மஹிந்த்ரா தார் ஷோரூம் அமைந்துள்ளது. இங்கு கணவன், மனைவி இருவரும் புத்தம் புதிய மஹிந்த்ரா தாரை திங்கள்கிழமை மாலை வாங்கியுள்ளார்கள்.
15 அடி உயரத்தில் முதல் மாடியில் தார் நிறுத்தப்பட்டிருந்தது. காரை வாங்கியவுடன், இந்தியாவில் பொதுவாக இருக்கும் நம்பிக்கையின்படி எலுமிச்சை மீது தாரை ஏற்ற நினைத்திருக்கிறார்கள். காரை வாங்கிய 29 வயது இளம்பெண், எலுமிச்சை மீது ஏற்ற முயற்சித்துள்ளார்.
தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதிக்க, புத்தம் புதிய மஹிந்த்ரா தாரானது முதல் மாடியிலிருந்து கண்ணாடி தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து கவிழ்ந்ததாகத் தெரிகிறது. முதல் மாடியிலிருந்த கண்ணாடி முற்றிலுமாகச் சிதறி நொறுங்கியுள்ளது. மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மாலை 6.08 மணியளவில் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையின்படி கார் விபத்துக்குள்ளானபோது, பெண், அவருடைய கணவர் மற்றும் ஷோரூம் ஊழியர் ஒருவர் அதில் இருந்துள்ளார்கள். எனினும், யாருக்கும் பெரியளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. காரை இயக்கிய பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மஹிந்த்ரா தார் கீழே கவிழ்ந்து கிடந்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். மேலும், சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை. இதுதொடர்பாக புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mahindra Thar | Lemon Ritual | Nimbu Ritual | Thar | Delhi | Mahindra Thar Delhi |