ANI
இந்தியா

பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்

கிழக்கு நியூஸ்

பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி இன்று காலமானார்.

பிஹார் துணை முதல்வராக இருந்துள்ள சுஷில் குமார் மோடி, கடந்த 6 மாதங்களாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக ஏப்ரல் மாதம் அறிவித்தார். தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்பதையும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் இன்று காலமாகியுள்ளார். இவரது உடல் நாளை காலை அவருடைய இல்லத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. நாளை மாலை இறுதி மரியாதைகள் செய்யப்படுகின்றன. சுஷில் குமார் மோடியின் மறைவுக்கு பிகாரின் தற்போதைய துணை முதல்வர்கள் சாம்ராத் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

சுஷில் குமார் மோடி 1996 முதல் 2004 வரை பிஹார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2005 முதல் 2013 வரை பிஹார் துணை முதல்வராக இருந்தார். மீண்டும் 2017 முதல் 2020 வரை மீண்டும் பிஹார் துணை முதல்வராக இருந்துள்ளார். இதுதவிர சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவருடைய மறைவு பிஹார் பாஜகவுக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது.