இந்தியா

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல்: யார் யாருக்கு எந்தெந்த இடம்? | Forbes |

கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து கீழிறங்கினார் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார்...

கிழக்கு நியூஸ்

இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் ரூ. 9.30 லட்சம் கோடி மதிப்புடன் இந்த ஆண்டும் முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார்.

போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலை, அவர்களது நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2025 ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ரிலயன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ. 9.30 லட்சம் கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவரது சொத்து மதிப்பு ரூ. 12.8 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இரண்டாம் இடத்தில் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி, 92 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் உள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ. 81.5 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவரது சொத்து மதிப்பும் 20% குறைந்துள்ளது.

ஓ.பி. ஜிண்டால் நிறுவனங்களின் தலைவர் சாவித்ரி ஜிண்டால், 40.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்திய மதிப்பில், ரூ. 35.6 ஆயிரம் கோடியுடன் நாட்டின் பணக்காரப் பெண்மணியாகத் திகழ்கிறார் சாவித்ரி ஜிண்டால்.

பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் நான்காம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 34.2 பில்லியன் அமெரிக்க டாலர். அதன் இந்திய மதிப்பு ரூ. 30.2 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு 30.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ஏழாவது இடத்தில் இருந்த சுனில் மிட்டல், இந்த ஆண்டு நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் 33.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு ரூ. 29.4 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு 33.6 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் இருந்த இவர், இந்த ஆண்டு ஐந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளார்.

டிமார்ட் வணிகச் சங்கிலி நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமானி, 28.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் ஆறாம் இடத்தில் உள்ளார். இவரது சொத்துகளின் இந்திய மதிப்பு, 25 ஆயிரம் கோடி. சன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் திலிப் சங்வி 26.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் ஏழாவது இடத்தில் உள்ளார். பஜாஜ் குழுமம் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ஒன்பதாம் இடத்தில் சைரஸ் பூனாவாலா 21.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உள்ளார். பத்தாம் இடத்தில் 20.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் குமார் பிர்லா உள்ளார்.

இந்த ஆண்டின் பட்டியலில் 37-வது இடத்தில் சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனமான வாரி எனர்ஜீஸ் உரிமையாளர்கள் தோஷி சகோதரர்கள், 80-வது இடத்தில் மின்சாதன பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டிக்சன் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் சுனில் வசானி ஆகிய புது பணக்காரர்கள் இணைந்துள்ளார்கள்.