இந்தியா

வரலாற்றில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள திருமணம்!

சிஆர்பிஎஃப் அதிகாரியாக மட்டுமல்லாமல் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமூகப் பணியையும் மேற்கொண்டு வருகிறார் பூனம் குப்தா.

ராம் அப்பண்ணசாமி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைத் தொடர்ந்து, தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல்முறையாக திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஷிவ்பூரியைச் சேர்ந்த பூனம் குப்தா, யுபிஎஸ்சி துணை ராணுவப் படைகளுக்கான துணை கமாண்டர் தேர்வில், கடந்த 2018-ல் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து கடந்த 2023 குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது பெண் சிஆர்பிஎஃப் வீராங்கனைகளைக் கொண்ட அணியை வழிநடத்தி அவர் கவனம் பெற்றார்.

சிஆர்பிஎஃப் அதிகாரியாக மட்டுமல்லாமல், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமூகப் பணியையும் மேற்கொண்டு வருகிறார் பூனம் குப்தா. நக்சலிஸம் பாதிக்கப்பட்ட இடங்களிலும் இவர் திறம்படப் பணியாற்றியுள்ளார்

தற்போது குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றும் பூனம் குப்தா, பணியில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் கொண்டுள்ள அக்கறை போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் மாளிகையில் இவரது திருமணத்தை நடத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, பூனம் குப்தாவிற்கும், ஜம்மு-காஷ்மீரில் பணிபுரியும் சக சிஆர்பிஎஃப் துணை கமாண்டரான அவினாஷ் குமாருக்கும் வரும் பிப்.12-ல் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதன் மூலம், குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து திருமணம் செய்து கொண்ட முதல் தம்பதியினர் என்கிற பெருமையை பூனம் குப்தாவும், அவினாஷ் குமாரும் பெறுகிறார்கள்.