ANI
இந்தியா

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் நடைமுறை: சிபிஎஸ்இ ஒப்புதல்! | CBSE | Open Book Exams | Class 9

கிடைக்கக்கூடிய தகவல்களை பல்வேறு வகையில் பயன்படுத்த இத்தகைய தேர்வுகள் வழிவகை செய்கின்றன.

ராம் அப்பண்ணசாமி

வரும் 2026-27 கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டத்திற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) ஒப்புதல் அளித்துள்ளது.

சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இத்தகைய நடைமுறைக்கு ஆசிரியர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இடைநிலைக் கல்வி வாரியத்தின் உச்சபட்ட அதிகாரம் பொருந்திய நிர்வாகக் குழு, இந்த திட்டத்தை அங்கீகரித்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 9-ம் வகுப்பில் `ஒரு பருவத்திற்கு மூன்று தேர்வுகள்’ என்ற அடிப்படையில் புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மொழி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற முக்கிய பாடங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ அடிப்படையாகக் கொண்ட `பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வரைவு (NCFSE) 2023’ உடன் இந்த திட்டம் ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது.

புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதும் திட்டம் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு மிகவும் சாத்தியமான வடிவம் என்று பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வரைவு குறிப்பிடுகிறது.

குறிப்பாக, `புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதும் முறையில் மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது குறிப்புகள் (எ.கா., பாடப்புத்தகங்கள், வகுப்பு குறிப்புகள், நூலக புத்தகங்கள்) எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக இருக்கும்.

கிடைக்கக்கூடிய தகவல்களை பல்வேறு வகையில் பயன்படுத்த இத்தகைய தேர்வுகள் வழிவகை செய்கின்றன. நினைவுகூரலில் இருந்து பயன்பாடு மீது இவை மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றன’ என்று பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வரைவு கூறுகிறது.