வரலாற்றில் மூன்றாவது முறையாக, குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் பகுதியளவு மட்டுமே ஜம்மு காஷ்மீர் பங்கு வகிக்கவுள்ளது. ஏனெனில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான நான்கு மாநிலங்களவை எம்.பி. இடங்களும் தற்போது காலியாக உள்ளன.
மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்து குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கடந்த 1992-ல் குடியரசுத் துணை தலைவரை தேர்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றபோது, அன்றைய பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த ஆறு மக்களவை எம்.பி. இடங்களும் காலியாக இருந்துள்ளன. பயங்கரவாத பாதிப்பு காரணமாக 1991-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்பு ஜம்மு & காஷ்மீரில் நடைபெறவில்லை.
ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்புத் தேவையை தற்காலிகமாக ரத்து செய்ய மத்திய அரசு ஓர் அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. 1996 மக்களவை தேர்தல் வரை ஜம்மு காஷ்மீருக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
இதைத் தொடர்ந்து, 2022-ல் 16-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, ஜம்மு காஷ்மீருக்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. ஜம்மு காஷ்மீரின் நான்கு மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 2021-ல் முடிவுக்கு வந்திருந்தது.
என்னும் புதிய மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாததால், அதற்கான தேர்தல் நடைபெறவில்லை.
2019-ல் மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் தேர்தெடுக்கப்பட்டு புதிய அரசு பதவியேற்றுக்கொண்டாலும், நான்கு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், 17-வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வரும் செப்டம்பர் 9-ல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்.