இந்தியா

நாடு முழுவதும் விமான சேவைகள் சீராகி வருகின்றன: அமைச்சர் ராம்மோகன் நாயுடு

ராம் அப்பண்ணசாமி

விண்டோஸ் இயங்குதள பிரச்சனையால் நேற்று (ஜூலை 19) உலகம் முழுவதும் விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்திய விமான நிலையங்களின் சேவைகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி நாடு முழுவதும் விமான சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்று பிற்பகலுக்குள் விமான சேவைகள் முற்றிலுமாக சீராகும், பொறுமையுடன் காத்திருந்த பயணிகளுக்கு நன்றி, ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணம் உடனுக்குடன் திரும்பி வழங்கப்பட்டு வருவதாகவும், பதிவிட்டுள்ளார் அமைச்சர் ராம்மோகன் நாயுடு.

இந்த விண்டோஸ் இயங்குதள பிரச்சனையால் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, கைகளில் போர்டிங் பாஸ் எழுதித் தரப்பட்டன. ஆனால் இன்று (ஜூலை 20) சென்னை விமான நிலையத்திலும், மதுரை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு வழக்கமான முறைப்படி போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்டோஸ் இயங்குதள பிரச்சனைக்குக் காரணமான crowdstrike நிறுவனம் இன்று இரவுக்குள் தொழில்நுட்பக் கோளாறு முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிடும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனையால் நேற்று உலகம் முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.