தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து அருந்தி 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனியை மத்தியப் பிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மீது மத்தியப் பிரதேச காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவரே, கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை பல்வேறு குழந்தைகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தில் பாராசியா என்ற பகுதியில் 9 குழந்தைகள் உயிரிழந்தான. ராஜஸ்தானில் இரு குழந்தைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசான் எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தான் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
உடற்கூராய்வில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அருந்திய இருமல் மருந்தில் டைஎத்திலின் கிளைகால் (Diethylene Glycol) கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது சிறுநீரகத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதுவே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருமல் மருந்தில் டைஎத்திலின் கிளைகாலின் அனுமதிக்கப்பட்ட அளவு 0.1%. ஆனால், கோல்ட்ரிஃப் மருந்தில் இது 48 சதவீதத்துக்கு மேல் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. டைஎத்திலின் கிளைகால் நச்சுத்தன்மை கொண்டது என்பதால், இது மிகவும் அபாயகரமான அளவு என நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரேக் திரவங்கள், பெயின்ட், பிளாஸ்டிக்கில் உபயோகப்படுத்தக்கூடிய ரசாயனம் தான் டைஎத்திலின் கிளைகால்.
தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே இந்த மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டுமே இந்த மருந்தானது விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைப் பரிந்துரைத்த குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனி, மத்தியப் பிரதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மீது மத்தியப் பிரதேச காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 1 அன்று கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. சந்தைகளிலிருந்து இம்மருந்தை நீக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் கேரளத்திலும் இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Coldrif | Cough Syrup |