தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முஹமது ஸுபேர் மீது உத்தரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் காஸியாபாத் காவல் துறையினர் இதைத் தெரிவித்துள்ளார்கள்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 152-ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கப்படாது.
வழக்கு என்ன?
டாஸ்னா தேவி கோயிலின் தலைமைப் பூசாரி யதி நரசிங்கானந்த், முஸ்லிம்கள் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக அவருடையப் பழைய காணொளியை முஹமது ஸுபேர் பகிர்ந்ததாக, யதி நரசிங்கானந்த் சரஸ்வதி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உதிதா தியாகி புகாரளித்தார்.
முஹமது ஸுபேர் கடந்த அக்டோபர் 3 அன்று காணொளியைப் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொளியில் முஹமது நபிகள் குறித்து இழிவான கருத்துகளைப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள், யதி நரசிங்கானந்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்ய வலியுறுத்தினார்கள்.
இந்தக் காணொளியைப் பகிர்ந்த புகாரில் முஹமது ஸுபேர் மீது காஸியாபாத் காவல் துறையினர் கடந்த அக்டோபர் 8-ல் வழக்குப்பதிவு செய்தார்கள். அப்போது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி, முஹமது ஸுபேர் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மேலும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் காஸியாபாத் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். அலஹாபாத் உயர் நீதிமன்றம் இவற்றை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பெயரில் காஸியாபாத் காவல் துறையினர் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். பிரமாணப் பத்திரத்தில் பிரிவு 152 மற்றும் பிரிவு 66-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஸியாபாத் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 152 என்பது புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ள தேசத்துரோக வழக்கு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. யதி நரசிங்கானந்த் சர்ச்சைக்குரிய பேச்சுக்குப் பிரபலமானவர் என்றும் இவர் மீது இதுபோன்று பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் கூறி முஹமது ஸுபேருக்கு ஆதரவாகக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
முஹமது ஸுபேருடன் துணை நிற்பதாக ஆல்ட் நியூஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.