ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமத்திற்கு அருகே இன்று (ஜூலை 9) ஜாகுவார் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், இந்திய விமானப்படை விமானிகள் இருவர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு வெளியான முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு வயலில் இருந்த விமானத்தின் இடிபாடுகள் இருந்து ஒரு விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட விமானியின் உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த விபத்தில் இறந்த விமானி மற்றும் மற்றொருவரின் அடையாளங்களை வைத்து, அவர்களை விமானப்படையும், உள்ளூர் நிர்வாகமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வானத்திலிருந்து பெருத்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வயல்களில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகைமூட்டம் எழுந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தால் அருகிலுள்ள வயல்களில் ஏற்பட்ட தீ விபத்தை தாங்கள் அணைக்க முயன்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போர் விமானத்தை வைத்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றிருக்கக்கூடும் என்று இந்தியா டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு, ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் பிகானரில் தளங்கள் இருக்கின்றன.
விபத்திற்குப் பிறகு சுரு மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையை முடிந்த பின்னர், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.