இந்தியா

புதிய பான் அட்டைகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அம்சங்கள் என்னென்ன?

பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் அட்டைகள் வழங்கப்பட்டாலும், புழக்கத்தில் உள்ள பான் அட்டைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய வடிவமைப்பிலான பான் கார்டுகளை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய குடிமக்களுக்கு மத்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் பிரத்தியேகமான 10 இலக்க அடையாள எண் பான் (PAN) என்று அழைக்கப்படும். புதிய வங்கிக் கணக்குகள் தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது, கடன் வாங்குவது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பது என பல்வேறு நிதி தொடர்பான செயல்பாடுகளுக்கு இந்த 10 இலக்க பான் எண் முக்கியமான ஆவணமாக உள்ளது.

இந்நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பான் அட்டைகளை வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 1,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களிடம் உள்ள பான் அட்டையில் 10 இலக்க அடையாள எண் இருக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பான் அட்டையில் 10 இலக்க எண்ணுடன் QR குறியீடும் இடம்பெற்று இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும், பான் எண்ணை உபயோகித்து மேற்கொள்ளப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் எனவும், கூறப்படுகிறது.

மேலும் பான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய பான் அட்டைகள் வழங்கப்பட்டாலும், புழக்கத்தில் உள்ள பான் அட்டைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. QR குறியீடுகள் இல்லாத பழைய பான் அட்டைகளை வைத்திருப்பவர்கள் புதிய ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை.