ஃபரூக் அப்துல்லா (கோப்புப்படம்)
ஃபரூக் அப்துல்லா (கோப்புப்படம்) ANI
இந்தியா

தனித்துப் போட்டி: ஃபரூக் அப்துல்லாவின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

கிழக்கு நியூஸ்

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் முறையே மேற்கு வங்கம், பஞ்சாபில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக இண்டியா கூட்டணியின் உறுதித்தன்மை கேள்விக்குள்ளானது. பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் மெகா கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு-காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

அண்மையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் யூட்யூப் பக்கத்தில் பேசிய ஃபரூக் அப்துல்லா, "நாட்டைப் பாதுகாக்க நமது கருத்து முரண்களை ஓரம் ஒதுக்கிவிட்டு, நாட்டு நலனை முன்னிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.

இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சியின் பல்வேறு முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். கட்சியின் கதுவா மாவட்டத் தலைவர் சஞ்சீவ் கஜுரியா அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதுதவிர, பல்வேறு மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடந்த மாதம் தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தார்கள்.

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் பணமோசடி வழக்கில் ஜனவரி 11-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை ஃபரூக் அப்துல்லாவுக்கு அழைப்பாணை அனுப்பியது. ஆனால், ஃபரூக் அப்துல்லா அப்போது விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஃபரூக் அப்துல்லாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக 2022-ல் அமலாக்கத் துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.