இந்தியா

ஏ.டி.எம். மூலம் பி.எஃப். கணக்கில் பணம் எடுக்கும் வசதி: தொழிலாளர் அமைச்சகம்

கடந்த 2017-ல் நாட்டில் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

வருங்கால வைப்பு நிதியான பி.எஃப். கணக்கில் இருந்து, ஏ.டி.எம். வழியாக பணத்தை எடுக்கும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சக செயலாளர் அறிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு நேற்று (டிச.11) மத்திய தொழிலாளர் நல செயலாளர் சுமிதா தாவ்ரா வழங்கிய பேட்டி பின்வருமாறு, `பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் கோரி விண்ணப்பித்துள்ளோருக்கு, அதை விரைவாக வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலான பணிகள் நடந்துவருகின்றன.

மனித தலையீடு இல்லாமல், ஏ.டி.எம். வழியாக பி.எஃப். கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, இந்த நடைமுறை அமலுக்கு வரும்’ என்றார்.

மேலும், கடந்த 2017-ல் நாட்டில் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், அதேநேரம் நாட்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் சுமிதா தாவ்ரா.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் உள்ளன. மேலும், தற்போது பி.எஃப். கணக்கில் பங்களிப்பு அளிக்க தொழிலாளர்களுக்கு 12 சதவீதம் வரம்பு அமலில் உள்ளது. இந்த வரம்பை தளர்த்தும் வகையிலான முடிவை விரைவில் அரசு எடுக்கும் எனவும் தகவலளித்துள்ளார் சுமிதா தாவ்ரா.