இந்தியா

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: குற்றச்சாட்டும், விளக்கமும்!

1963-ல் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான மக்களவைத் தொகுதிகள் 39 ஆகக் குறைக்கப்பட்டன.

ராம் அப்பண்ணசாமி

தவெகவின் முதல் பொதுக்குழு அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை விஜய் தாக்கிப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாகத் தலைநகர் தில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

`சகோதரர் விஜய்க்கு ஒரு சிறிய அரசியல் பாடத்தை நான் எடுக்க விரும்புகிறேன். 1973-ல் கடைசியாக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு இந்தியாவில் நடைபெற்றபோது, மொத்த மக்களவை தொகுதிகள் 522-ல் இருந்து 542 ஆக உயர்த்தப்பட்டன. ஆனால் அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

சில மாநிலங்களுக்கு 3 இடங்கள் கூட அதிகரித்தன. அன்றைக்கு மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தன.

20 தொகுதிகள் உயர்த்தப்பட்டபோது அன்றைய திமுக அரசு தமிழகத்திற்கு ஒரு இடத்தைக்கூடப் பெற்றுத் தரவில்லை. அப்படியென்றால் நியாயப்படி விஜய் யாரை குற்றம்சாட்டியிருக்கவேண்டும்? எனவே விஜய் அரசியல் புரிதலுடன் பேசவேண்டும்’ என்றார்.

1950-ல் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து இந்தியா குடியரசான பிறகு 1952-ல் முதல்முறையாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு 1951-ல் முதல்முறையாக அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு ஆணையத்தின் (delimitation commission) பரிந்துரைப்படி இந்தியாவிற்கான மக்களவைத் தொகுதிகள் 494 ஆக நிர்ணயிக்கப்பட்டன.

1962-ல் நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலில் அன்றைய மெட்ராஸ் மாநிலத்திடம் (தமிழ்நாடு என்று அப்போது பெயர் மாற்றப்படவில்லை) 41 மக்களவை தொகுதிகள் இருந்தன. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரையை வழங்க இரண்டாவது முறையாக மறுசீரமைப்பு ஆணையம் 1963-ல் அமைக்கப்பட்டது.

அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 1967-ல் தமிழ்நாட்டிற்கான மக்களவைத் தொகுதிகள் 41-ல் இருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டன.

1967 மக்களவைத் தேர்தலில் 36 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி (திமுக-25, சுதந்திரா கட்சி-6, சிபிஎம்-4 மற்றும் சுயேட்சை-1) வெற்றிபெற்றது. அதோடு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் 179 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது திமுக.

இதற்குப் பிறகு, மூன்றாவது முறையாக 1973-ல் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ.எல். கபூர் தலைமையிலான மறுசீரமைப்பு ஆணையம் நாட்டின் மக்களவை தொகுதிகளை 522-ல் இருந்து 542 ஆக உயர்த்த பரிந்துரைத்தது (சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை அடுத்து ஒரு தொகுதி சேர்க்கப்பட்டு, இது 543 ஆக உயர்த்தப்பட்டது).

1971 மக்கள்தொகை அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்கப்பட்ட 20 மக்களவை தொகுதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதேநேரம், தமிழகத்திற்கான மக்களவை தொகுதிகள் கூடவும் இல்லை, குறையவும் இல்லை.

அதன்பிறகு, அவசரகாலத்தின்போது இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்ட 42-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலம், 2000 ஆம் ஆண்டு வரை மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள (25 ஆண்டுகளுக்கு) தடை பிறப்பிக்கப்பட்டது.

நாட்டின் மக்கள்தொகையைக் குறைக்கும் வரை மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு ஏதிராகவே 42-வது சட்ட திருத்தத்தின் மூலம் மறுசீரமைப்பு நடவடிக்கைக்குத் தடை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடு முழுவதும் மத்திய அரசு முன்னெடுத்தது.

ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கட்டுக்குள் வரவில்லை. அந்த நிலையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்தது.

எனவே அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு 84-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றியது மூலம், 2026 வரை மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. இதன்படி 2026-ல் மறுசீரமைப்பு நடவடிக்கை நடைபெறவேண்டும்.

ஒட்டுமொத்தமாக கடந்த 50 ஆண்டுகளில், மக்கள்தொகையை வெகுவாக தென்மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளன. ஆனால் வட மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதே அளவில் உள்ளது. எனவே கூடிய விரைவில் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கீட்டை அடிப்படையாக வைத்து 2026-ல் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.