கத்தாரிலிருந்து நாடு திரும்பிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் ANI
இந்தியா

கத்தாரிலிருந்து இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் விடுதலை: அரசுக்குப் பாராட்டுகள்

வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி அந்த நாட்டு அரசு வழக்கு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடவில்லை.

கிழக்கு நியூஸ்

கத்தாரில் இருந்தபடி இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் கத்தாரில் அல் தாரா என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்கள். அப்போது அந்த நாட்டின் கடற்படை சார்ந்த ரகசியத் திட்டங்களை இஸ்ரேல் நாட்டின் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நவ்ஜீத் சிங் கில், புரேந்து திவாரி, வீரேந்திர குமார் வர்மா, சஞ்சீவ் குப்தா, சௌரவ் வசிஷ்ட், அமித் நாக்பால், சுகுநாகர் பகலா, ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார்கள். 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீடு செய்யப்பட்டதில் கடந்த டிசம்பர் 28-ல் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி அந்த நாட்டு அரசு வழக்கு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடவில்லை. இந்திய அரசு தரப்பிலும் வழக்கு சார்ந்து எதுவும் வெளியிடப்படவில்லை. இவர்களை விடுதலை செய்வதற்கானப் பணிகளை இந்திய வெளியுறவுத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13, 14-ல் இரு நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்வதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும்போது கத்தார் செல்வதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேர் கத்தாரிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை உறுதி செய்தது. இதில் 7 பேர் தாயகம் திரும்பிவிட்டார்கள். மீதமுள்ள ஒருவர் விடுதலை செய்யப்பட்டாலும், அவர் கத்தாரிலிருந்து இன்னும் தாயகம் திரும்பவில்லை. அவர் விரைவில் நாடு திரும்புவது குறித்து கத்தார் அரசுடன் பேசி வருவதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் மோகன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை இந்திய வெளியுறவுத் துறை கையாண்ட விதமும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவும், பிரதமர் மோடியின் கத்தார் பயண அறிவிப்பும், பிரதமர் மோடி - கத்தார் எமிர் இடையிலான நட்புறவும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் விடுதலையை சாத்தியப்படுத்தியது மட்டுமின்றி துரிதப்படுத்தியதாகவும் நிபுணர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.