இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை: தில்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கடந்த 3-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பானது நாளை பிற்பகல் 2.30 மணியளவில் வாசிக்கப்படுகிறது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கைது நடவடிக்கையின் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் தெரிவித்தார். ஜனநாயகப் பணியாற்றுவதிலிருந்து இவரைத் தடுப்பதற்காகவே இந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.